Wiki
2005 இயற்பியல் ஆண்டு
2005 ஆம் ஆண்டை இயற்பியல் ஆண்டாக அறிவிக்கலாம் என்று ஐரோப்பிய இயற்பியல் சமூகம் கூறியது, தொடர்ந்து அமெரிக்க இயற்பியல் சமூகமும் (American Physical Society) அமெரிக்க இயற்பியல் கழகமும் (American Institute of Physics) இணைந்து இயற்பியல் ஆண்டாக அறிவித்தன. இந்த அறிவிப்புகள் பரவலாக வரவேற்பைப் பெற்று ஐக்கிய நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் இயற்பியலின் வெற்றிகள் கொண்டாடப்படும்.
இயற்பியல் ஆண்டு? ஏன்?
அப்படியென்ன இயற்பியல் பெரிய வெற்றியைச் சாதித்துவிட்டது என்று சிலர் கேட்கலாம்; அதற்குப் பதில் சொல்வது ஒன்றும் கடினமான காரியம் இல்லை. இன்றைக்கு நீங்கள் துய்க்கும் அத்தனை - மீண்டும் சொல்கிறேன் அத்தனை, எல்லா, சகலம், அனைத்து… கருவிகளும் இயற்பியலின் வெற்றிதான். பதினெட்டாம் நூற்றாண்டு தொடங்கி வரும் நூற்றாண்டிலும் இயற்பியல்தான் பிற அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிகோலியிருக்கிறது என்றால் அது மிகையில்லை. இப்பொழுது பரவலாகத் துய்க்கப்படும் தொழில்நுட்பங்களைப் பார்க்கலாம். நீங்கள் பயன்படுத்தும் கணினியின் மையமாக இருக்கும் நுண்செயலி இயற்பியலின் வெற்றி (குறைகடத்திகள்), தகவல் புரட்சியை நடத்தும் இணையத்தின் முதுகெலும்பான ஒளியிழைகள் இயற்பியலின் வெற்றி, அவற்றினூடு செய்திகளைக் கடத்தும் லேசர்கள் இயற்பியல் சாதனை, இன்னும் இன்றைக்குப் பயன்படும் விவசாயம் தொடங்கி விண் ஆய்வு ஈடாக (இடையில் வேதியியல், உயிரியல், நிலவியல், வானியல், விண்கோளியல், பிரபஞ்சவியல், மருத்துவக் கருவிகள், உயிர்த்தொழில்நுட்பம், தகவல் நுட்பம், கணினிகள் என்று விரியும்) எல்லாமே முதன் முதலில் இயற்பியலாளர்கள் வரையறுத்தவை அல்லது வடிவமைத்தவைதான். இத்தனைக்கும் முதுகெலும்பாக இருக்கும் இயற்பியலில் அருமையும் அதன் அழகியலும் பலருக்கும் தெரிவதில்லை. எனவேதான், இவற்றை எடுத்துச் சொல்லும் முகமாக 2005 ஆம் ஆண்டு இயற்பியல் ஆண்டாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏன் 2005?
சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சுவிஸ் நாட்டில் காப்புரிமை அலுவலகத்தில் ஒருவர் வேலை செய்துவந்தார். அவர் இயற்பியலில் மூன்று முக்கிய கண்டுபிடிப்புகளைப் பதிப்பித்தார், எனவேதான் 2005. எந்த அளவுக்கு முக்கியம்? - இன்றைக்கு நாம் வாழும் விதத்தையே இந்த மூன்று புரிதல்களும் மாற்றியிருக்கின்றன. நீங்கள் ஊகித்திருக்கக் கூடும் - ஆமாம், அந்த மனிதரின் பெயர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின். அந்த மூன்று கண்டுபிடிப்புகள்;
1. ஒளி சில சமயங்களில் தொடர்ச்சியான அலையைப் போலவும் சில சமயங்களில் குறிப்பிட்ட சக்திகளை மாத்திரமே கொண்ட துகளைப் போலவும் செயல்படுகிறது. - அதாவது ஒளிக்கு அலை-துகள் இருமைப் பண்பு (Wave-Particle Duality) இருக்கிறது.
2. மூலக்கூறு மற்றும் அணுக்களின் அடிப்படையிலாக வெப்பத்தின் ப்ரொனியன் இயக்கத்தை விளக்குதல் (Molecular theory of Brownian motion). இது அப்பொழுது நிச்சயமற்றிருந்த அணுக்களின் இருப்பை இன்னும் உறுதிப்படுத்தியது.
3. விசேடச் சார்நிலைக் கோட்பாடு (Special Theory of Relativity). “அசையும் பருப்பொருட்களின் மின்னியக்கவியல்” என்ற ஆய்வுரை காலம், தொலைவு, பொருண்மை, சக்தி இவற்றுக் கிடையேயான தொடர்பை விளக்கியது. (ஈர்ப்பு விசையைப் பற்றி ஐன்ஸ்டைன் இந்த இடத்தில் பேசவில்லை - எனவேதான் இது விசேட சார்நிலை என்று பெயரிடப்பட்டது - பொதுமைச் சார்நிலை அல்ல). இந்தக் கருத்துகளின் அடிப்படையில் காலம்-வெளி இவற்றுக்கிடையேயான தொடர்பும், சக்தி - பொருண்மை இவற்றுக் கிடையேயான தொடர்பும் நிறுவப்பட்டது.
இவற்றைத் தவிர 1905ஆம் ஆண்டின் பின்பகுதியில் ஐன்ஸ்டைன் மிகப் புகழ்பெற்ற E=mc2 என்ற சக்திக்கும் பொருண்மைக்குமான தொடர்பு (Mass-Energy Equivalence) சமன்பாட்டை வெளியிட்டார். அதன் பின்விளைவாக இன்றைக்கு நாம் அணுவைப் பிளந்து சக்தி பெறுவதும், அதன் துஷ்பிரயோகமாக நகஸாகி, ஹிரோஷிமா என்ற இரண்டு வடுக்களையும் நாம் துய்க்கிறோம்.
இந்தத் தளத்தின நோக்கம்
2005-ஆம் ஆண்டு முழுவதும் உலகெங்கும் இயற்பியல் தொடர்பான சொற்பொழிவுகள், மாணவர்களுக்கான போட்டிகள் என்று இயற்பியலைப் பற்றிய புரிதலை முன்னெடுத்துச் செல்ல உத்தேசித்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்தவரை இந்தியாவிலோ, இலங்கையிலோ இதைப் பற்றி அமைப்பு ரீதியாக அதிகம் கவலைப்பட்டதைப் போலத் தோன்றவில்லை. எனவே இது எம்மாலான சிறு முயற்சி. (இதில் நீங்களும் பங்குபெறலாம்). மேலதிகத் தகவல்களை விரைவில் இங்கே இடுவோம். அந்த நேரத்தில் மேற்சொன்ன மூன்று விஷயங்களைப் பற்றியும் அதையும் தாண்டி பொதுவில் இயற்பியல் பற்றியும் நாம் நிறையக் கற்றுக் கொள்ள முயற்சிப்போம்.