இயற்பியல்::2005

Thursday, 24.11.05

வருங்கால ஜனாதிபதிகளுக்கான இயற்பியல்

ஆமாம், உண்மையிலேயே கலிபோர்னியா (பெர்க்லி) பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் ஒரு பாடத்தின் தலைப்பு இதுதான்: Physics For Future Presidents (What every world leader needs to know).

இயற்பியலைக் கற்றுக்கொள்ள ஆர்வமிருக்கும் பலரும் அதில் வரும் நீண்ட சமன்பாடுகளையும் கணக்கீடுகளையும் கண்டு ஒதுங்கி ஓடுவதைப் பார்த்திருக்கிறேன். கணித அடிப்படையில்லாமல் இயற்பியலைக் கற்றுக்கொடுப்பது நல்லதில்லை என்றபொழுதும் பல விஷயங்களில் இயற்பியலை அடிப்படைகளை மிக எளிதாகச் சொல்லிக் கொடுக்க முடியும். அந்த வகையில் நான் எதேச்சையாகக் கண்டுபிடித்தது இந்த பாடத்திட்டம். இதைப் போன்றே பல பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகிறது. நான் வேலை செய்யும் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையில் ' கவிஞர்களுக்கான இயற்பியல்' - Physics for Poets என்று தலைப்பிடப்பட்ட பாடத்திட்டம் ஒன்று பேராசிரியர் ராபர்ட் லோகன் என்பவரால் வழங்கப்பட்டு வந்தது. (கனடாவின் முதன்மை தொலைக்காட்சி ஒன்று நடத்திய சிறந்த ஆசிரியர்களை மாணவர்கள் பரிந்துரைக்கும் போட்டியில் கடைசி நால்வரில் ஒருவராக வந்த இவர் சமீபத்தில் ஓய்வு பெற்றார்).

பெர்க்லி பல்கலைக்கழகத்தின் இந்தப் பாடங்களைப் பற்றி நான் விசேடமாக இங்கு எழுதக் காரணம், இதன் மூலம் நீங்களும் கற்கலாம். ஆமாம். இலவச இணையப்பரப்பு வழியே நீங்கள் உங்கள் கணினியில் இவற்றைத் தரவிறக்கிப் பார்க்க (படிக்க) முடியும். இவற்றை வழங்கும் பேராசிரியர் ரிச்சர்ட் முல்லர் பெர்க்லி இயற்பியல் துறையின் பேராசிரியராக இருப்பதுடன்கூட லாரன்ஸ் பெர்க்லி ஆய்வகம் என்ற தேசிய ஆய்வுக்கூடத்தின் விஞ்ஞானியாகவும் இருக்கிறார். இவர் MIT Technology Review என்ற சஞ்சிகையில் தொடர் கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.

நான் இவற்றில் சிலவற்றை (கொஞ்சம்) பார்த்தேன். ரிச்சர்ட் முல்லர் மிக எளிமையான முறையில் கருத்துகளை விளக்குகிறார். இயற்பியலில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்தத் தொடர் வலைபரப்புகளைப் பரிந்துரைக்கிறேன். இந்தப் பாடங்களுக்கான மேலதிகத் தகவல்களை, பாடக்குறிப்புகளை இணையத்தின் வழியே பேரா. முல்லர் தொகுத்து வழங்குகிறார்.

Physics for Future Presidents - Webcast Home

Physics for Future Presidents - Homepage

venkat - pencil 10:29:41 - பொது - pencil நிரந்தரச்சுட்டி - கருத்து: 1 [25.11.05 01:00]
இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Saturday, 05.11.05

நோபெல் பரிசு பெற்றவரிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

இயற்பியலைக் கண்டு ஒதுங்கி ஒடுபவர்களுக்கு, இயற்பியலில் ஆர்வம் இருந்தும் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி. கொலராடோ பல்கலைக்கழகத்தில் கணினியில் சிறு ஊடாட்ட சலனிகளுடன் (interactive animations) இயற்பியலின் பல விஷயங்களை மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். இவற்றில் பல மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பாரம் இணைக்கப்பட்டு நெகிழும் சாதாரண சுருள்வில்லில் தொடங்கி இரு துளைகளின் வழியே செல்லும் லேசர் கதிர்களின் குவாண்டம் விளைவுகள் வரை பல விஷயங்கள் மிக எளிமையாகப் புரியும்படி வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தச் சலனிகள் மேக்ரோமீடியா ப்ளாஷ் மூலமோ ஜாவா உதவியுடனோ வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை வடிவமைத்திருக்கும் குழுவின் தலைவர் லேசர் மூலம் குளிர்-பொறி (laser cooling and trapping) மூலம் "போஸ்-ஐன்ஸ்டைன் இறுக்கம்" (Bose-Einstein Condensation) என்று கருத்தாக்கத்தைச் சோதனைமூலம் நிரூபித்துக் காட்டியதற்காக 2001 ஆம் ஆண்டின் நோபெல் பரிசு பெற்ற கார்ல் வீமன் (Carl Wieman) என்ற பேராசிரியர்.

நம்மூரில் ஆராய்ச்சியில் கொஞ்சம் பெரிய ஆளாக ஆனாலே பாடமெல்லாம் நடத்தமாட்டார்கள் (இதை நான் ஐஐஎஸ்ஸியில் படிக்கும்பொழுது நிறையவே கண்டிருக்கிறேன்) இந்த நிலையில் நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானி பள்ளிக்கூட குழந்தைகளுக்குப் புரியும்படியான பாடங்கள் தயாரிப்பதில் முனைந்திருப்பது நெகிழச் செய்கிறது. அறிவுப் பரவலாக்கம் ஓரளவுக்குப் படித்த அனைவருக்கும் தார்மீகக் கடமை என்று இங்கே என்னுடைய பேராசிரியர் சொல்லுவார். நான் கண்டவரையில் வட அமெரிக்காவில் நிறைய பேராசிரியர்களுக்கு இதில் நம்பிக்கை இருக்கிறது.

முக்கியமான விஷயம் - இந்த சலனிகளை இலவசமாக உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து பார்க்க முடியும்.

venkat - pencil 20:33:01 - பொது - pencil நிரந்தரச்சுட்டி - கருத்து எழுத!
இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Monday, 10.10.05

ஐன்ஸ்டைன் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி

einstein  nova

அமெரிக்காவின் பிபிஎஸ் தொலைக்காட்சி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நாளை (11 அக்டோபர் 2005) ஒளிபரப்பவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஐன்ஸ்டைனின் வாழ்க்கை, அவரது அறிவியல் கண்டுபிடிப்புகள் அவற்றின் முக்கியத்துவம் போன்றவை விளக்கப்படவிருக்கின்றன. பிபிஎஸ் மிக எளிமையாக பலரும் புரிந்துகொள்ளும் வகையில் சுவாரசியமான இதுபோன்ற பல நிகழ்ச்சிகளைத் தயாரிக்கிறது. எனவே நாளைய ஒளிபரப்பும் சுவாரசியமாக இருக்கும் என நம்பலாம். தவறாது பார்க்க நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன். வட அமெரிக்கக் கண்டம் முழுவதும் பல உள்ளூர் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும். இதன் விபரங்களை இங்கே அறியலாம் . இந்தியாவில் ஏதாவது உள்ளூர் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றனவா என்று விபரம் தெரிந்தவர்கள் சொல்லவும்.

இந் நிகழ்ச்சியைப் பற்றிய உங்கள் எண்ணங்கள், விமர்சனங்களை இங்கே பகிர்ந்துகொள்ளலாம்.

venkat - pencil 11:06:54 - பொது - pencil நிரந்தரச்சுட்டி - கருத்துகள்: 2 [18.10.05 09:08]
இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Thursday, 28.07.05

சி.வி. ராமன், மஹாத்மா காந்தி, டாக்டர். ரம்: ஒரு உரையாடல்

{சில நாட்களாக விடுபட்டிருந்த இந்தப் பதிவைப் புதுப்பிக்கும் பொருட்டு அருள்செல்வனின் வலைப்பதிவிலிருந்து மறுபதிப்பு செய்யப்படுகிறது}

மே, 1936ஆம் ஆண்டு, பெங்களூர் அருகிலிருந்த நந்தி குன்றுகளுக்கு வந்திருந்த காந்தியைச் சந்திக்க சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உயிரியலாளரும் ஒரு மதகுருவுமான டாக்டர்.ரம்மை (Dr.Rahm) ராமன் அழைத்துச் சென்றிருந்தார். அப்போது நடந்த உரையாடலின் ஒரு பகுதி:

ரம்:" உலகில் இத்தனை மதச் சண்டைகள் நடப்பது எனக்கு பெரும் குழப்பத்தையே அளிக்கிறது. இப்பூசல்களை முடிவுக்குக் கொண்டுவரவே இயலாதா".

காந்தி: "அது கிருத்துவர்களின் செயல்களைப் பொருத்தது. அவர்கள் மட்டும் மற்றவர்களுடன் சேர்ந்து வாழ மனம் வைத்தால்..! ஆனால் அவர்களுடைய தீர்வோ, கிருத்துவ மததை உலகில் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்."

டாக்டர் ரம் இந்த பதிலை காந்தியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. இதற்கு அவர் பதிலுரைக்கவில்லை. இன்னொரு கேள்வியை ரம் பதிலாகக் கேட்டார்: "சரி நாம் ஒன்று சேரத்தான் முடியாது. இப்போது வளர்ந்துவரும் நாத்திகத்தையாவது ஒன்றாகச் சேர்ந்து எதிர்த்துப் போராடலாம் இல்லையா? "

அப்போது சி.வி.ராமன் இடையில் புகுந்தார்: உங்கள் கேள்விக்கு நான் விடை அளிக்கிறேன். "கடவுள் என்று இருந்தால் நாம் நிச்சயமாக இவ்வண்டத்தில் அவரைத்தேட வேண்டும். கடவுள் இல்லை என்றால் தேடுவது வெறும் வீண்வேலை. பலரும் என்னை நாத்திகன் என்றே நினைக்கிறார்கள். நான் அப்படி இல்லை. வானவியலிலும், இயல்பியலிலும் இப்போது தொடர்ந்து வரும் கண்டுபிடிப்புகள் கடவுளைப்பற்றிய தோற்றங்களாகவே எனக்குப் படுகின்றன. மஹாத்மாஜி, மதம் மனிதர்களை ஒன்று சேர்க்காது. அறிவியல் அப்படி அனைவரையும் முழுமையாக ஒன்று சேர்க்க ஒரு வாய்ப்பை அளிக்கிறது. அறிவியலாளர்கள் அனைவரும் சகோதரர்கள்."

காந்தி: "அப்போது அதற்கு எதிர்மறை என்ன? அறிவியலாளர் அல்லாதோர் அனைவரும் சகோதரர்கள் அல்லர் என்பதா?"

ராமனுக்கு இந்த நகைச்சுவை புரிந்துவிட்டது. அவர் சொன்னார்:

" அனைத்து மனிதர்களும் அறிவியலாளர் ஆகலாம், மகாத்மாஜி".

(மஹாத்மா காந்தியின் தொகுப்பிலிருந்து)

venkat - pencil 10:32:59 - பொது - pencil நிரந்தரச்சுட்டி - கருத்து எழுத!
இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Thursday, 19.05.05

சென்னையில் குழந்தைகளுக்கான இயற்பியலாளர்கள் அறிமுகம்

சென்னை குழந்தைகள் அறிவியல் குழு (மைலாப்பூர்) மே, ஜூன் மாதங்களில் பிரபல இயற்பியலாளர்களைச் சிறுவர்/சிறுமியருக்கு அறிமுகப்படுத்தும் நோக்குடன் சில சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்திருக்கிறது. இதன் நிகழ்ச்சிப் பட்டியல் கீழே இணைக்கப்பட்டிருக்கிறது. உங்கள் வீட்டில், அண்மையிலிருக்கும் குழந்தைகளை இந்தச் சொற்பொழிவுகளைக் கேட்க ஊக்கப்படுத்துங்கள்.

நன்றி: தி ஹிந்து மே 16, 2005

[தொடர்ந்து வாசிக்க]

venkat - pencil 15:06:00 - பொது - pencil நிரந்தரச்சுட்டி - கருத்துகள்: 4 [29.05.05 04:20]
இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்

Older articles:

03.05.2005

30.04.2005

28.04.2005

14.04.2005

24.03.2005

16.03.2005

08.03.2005

02.03.2005

01.03.2005

25.02.2005

Invalid query: insert into blogcmsnucleus_httplog (XDATE,XTIME,XADDR,XAGENT,XPATH,XREFERER,XDNS) values ('090704','03:07:19','38.103.63.60','ccbot/1.0 (+http://w','/','','38.103.63.60')

Error: Access denied for user: 'dbo116103109@%' to database 'db116103109'